Tamil Newspaper

1 month ago, Mon, Oct 16, 2017, 22:46:19
Tamil Newspaper
காதலின் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்கி வரும் தாஜ்மகால் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ளது. சமீபத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு வெளியிட்ட உத்தரபிரதேச சுற்றுலா தலங்கள் பட்டியலில் தாஜ்மகால் இடம்பெறவில்லை. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தாஜ்மகால் பற்றி பல்வேறு வெறுப்புக்கருத்துக்களை மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சங்கீத் சோம் கூறியுள்ளார். சிசோலி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறுகையில், ‘தாஜ்மகாலுக்கு இந்திய வரலாற்றில் இடம் அளிக்கக்கூடாது. ஏனெனில் அது துரோகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய வரலாற்றின் களங்கம் என்றார். தாஜ்மகாலை கட்டிய மனிதர் (ஷாஜகான்) தனது தந்தையை இறுதிவரை சிறையில் அடைத்து இருந்ததாகவும், அவர் இந்துக்களை ஒழிக்க விரும்பியதாகவும் கூறிய சங்கீத் சோம், இப்படிப்பட்டவர்களுக்கு நமது வரலாற்றில் இடம் அளித்தால், அது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். எனவே இந்த வரலாற்றை நாம் மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Comments